22/12/2013
தமிழில் தட்டச்சிட கற்றுக்கொண்டேன். விசைப்பலகையும் கையுமாக நானே எனக்கே எனக்காக சிறு சிறு வாக்கியங்கள் செய்து பார்த்துக்கொண்டேன். என் விரல்களில் இருந்து கூகிள் மென்பொருளின் உதவியுடன் திரையில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் மகிழ்ச்சியே.
என் மொழியை நான் எழுத கூகிள் உதவி. நான் கால் உடைந்த நாய் போலவும், கூகிள் பின்னங்காலில் கட்டிவிடப்பட்ட சக்கரம்போலவும் இருந்தும், நானே எழுந்து ஓடுவதுப்போல் மனதில் ஒரு நினைப்பு.
மடிக்கணினியில் முதல் முறை தமிழ் எழுத எழுத நினைவுக்கு வந்தவர் அமரர் சுஜாதா. மென்பொருள், கணினி என தமிழில் அவருக்கே உரிய பிரமிப்பூட்டும் தமிழ் நடையில் அவர் பேசவது தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன.
சில நாட்கள் முன்பு மதன் கார்கி அவர்கள் ஒரு கணினி மென்பொருள் வடிவமைத்திருப்பதாகவும் அது தானாகவே கவிதை செய்யும் என்றும் படித்தேன். “கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு” என்று சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை போலவே இருந்தது. கதை இன்று நிஜம் ஆனது. சுஜாதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வியப்பாக உள்ளது.
கார்கியோ சுஜாதாவோ கூகிள் உதவியுடன் தமிழ் எழுதவதை தப்பாக நினைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். சுஜாதா திரைக்கதை எழுதும் ஒரு மென்பொருளுக்கு முதல்முறையாக தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து அதை மருதநாயகம் படத்தின் போது உபயோகிக்க நினைத்ததாக படித்தேன்.
இந்த புது கூகிள் கருவியின் உதவி கொண்டு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி பேசுயிருப்பார், அடுத்தவர் ஹஸ்க லஸ்கா போல் ஒரு பாடல் எழுதியிருப்பார். அடியேன் நானோ முதல் முறையாக மகிழ்ச்சி போங்க (மகிழ்ச்சி என்று தமிழில் டைப் செய்யும் பொழுதெல்லாம் அந்த சொல்லின் உச்சரிப்பில் சந்தோஷமடைந்து, பெரிதாக சிரித்துகொண்டே) என் தமிழ் வலைப்பதிவை தொடங்குகிறேன்!