அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறிவியல் புனைகதைகள் தொகுப்பான “விசும்பு” படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் எழுதப்பட்ட சயின்ஸ் பிக்ஸன் கதைகளை தேடிச்சென்ற போது எதேர்ச்சையாக கண்ணில் தென்பட்ட மற்றுமோர் புத்தகம் இது. ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற மற்ற நாவ்ல்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு, எனவே உடனே விசும்பு வாங்கிப் படித்தேன். அசந்து போனேன் என்று சொல்வது சற்றும் மிகையாகாது.
விசும்பு ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள நிகழ்கால சித்தர் ஒருவரைத் தேடி செல்லும் விஞ்ஞானிகள் பற்றிய முதல் கதையில் இருந்ததே ஆச்சரியங்களும் நம்மை புரட்டிப்போடும் கற்பனையும் தொடங்குகின்றன. இங்கிருந்து வேற்றுகிரக விண்கல், மூளைத்தூண்டிகள் (Cognitive Enhancers), ரசவாதம் (Alchemy), மனப்பிளவுப் பிரமைநிலை (Schizophrenia), அணு ஆயுதப் போர் என்று பின்வரும் கதைகளின் கருக்களும் களங்களும் பிரமிப்பின் உச்சம்.
பற்பல அறிவியல் கருத்துக்களை கையாளும் போது கதைகளில் நடையில் சற்றே தோய்வு ஏற்படும். இந்த விதிக்கு விலக்கு என்று இந்நாள் வரை சுஜாதா அவர்கள் மட்டுமே என்று அடியேனின் எண்ணம். இப்போது அந்த பட்டியலில் ஜெயமோகன் அவர்களும் கண்டிப்பாக உண்டு. எந்த ஒரு கதைலயிலும் பரபரப்புக்கும் குறைவில்லை, அதே சமயம் அறிவியல் கருத்துக்களுக்கும் ஆழமாக விவாதிக்கப் பட்டுள்ளது.
இந்த தொகுப்பின் மற்றுமொரு சிறப்பம்சம் கதைகளின் “இந்தியத்தனம்”. பொதுவாக தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள், மேற்கத்திய அம்சங்களுடன் நம் ஊரில் நடக்கும் கதைகளாகவே இருந்தன. ஜெயமோகனின் விசும்பு சிறுகதைகள் எல்லாமே நம் ஊரில் மட்டுமே நடக்ககூடிய கதைகள். கதைகளின் அறிவியலும் அவ்வண்ணமே. மற்ற சயின்ஸ் பிக்ஸன் கதைகள் போல இவற்றின் களங்களை மாற்றுவது என்பது இயலாத ஒன்று.
2.0 படத்தின் பட்சிராஜன் கதாபாத்திரத்தின் மூளைக்கதை தான் ‘விசும்பு’ என்ற சிறுகதை. இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே இந்த தொகுப்பை வாங்கி படிக்கலாம் என்று சொல்வேன்.
தொகுப்பின் கடைசியில் வருங்கால (பல நூற்றாண்டுகள் பின்) இலக்கியங்களும் அதன் வடிவங்களும் எப்படி இருக்கக்கூடும் என்று ஜெயமோகன் அவர்கள் சித்தரிக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. இப்போது பிரபலமாக விவாதிக்கப்படும் “பிரைன் கம்ப்யூட்டர் இன்டெர்பேஸ்” (BCI) மூலம் வருங்காலத்தில் நம் முலைகளும், எண்ணங்களும், கதைகளும், இலக்கியங்கலும் எப்படி இணைந்துபோகும் என்று ஒரு எண்ணம் வரைகிறார்.
சுஜாதா அவர்கள் அன்றி தமிழ் சயின்ஸ் பிக்ஸன் கதைகளில் அநாயசமாக பட்டையை கிளப்பும் ஒருவர் உள்ளார். அவரின் அருமையான இந்த படைப்பின் முதல் பக்கம் கீழே புகைப்படத்தில். என்ன பொருத்தம்!
One thought on “விசும்பு – விமர்சனம்”