வளரி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

வளரி தமிழர்களின் ஒரு உன்னத ஆயுதம். அதை பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளவர்கள் இந்த காணொளியை காணலாம்.

இனி சிறுகதை…

“யுத்ததேவன் பூமியை ஆட்கொண்டிருந்த காலம் அது. ஆடவர் போரில் சண்டையிட்டு, உணவு உண்டு, மது அருந்தி, உறங்கி, விழித்து மீண்டும்  போருக்கு சென்று சண்டையிடுவதையே தம் குலத் தொழிலாக கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களை வீரர்களாகவும் அரசர்களாகவும் மாற்றினர். இன்னும் சில வீர தமிழ் பெண்மணியினர்  தங்கள் தந்தையினரும், தமயர்களும், கணவன்மார்களும், மகன்களும் போர்களத்தில் தினந்தோறும் செத்துமடிய; உள்நாட்டில் சதிசெய்து மன்னர் இல்லாத நாட்டை சூறையாட நினைத்த கயவர்களிடமிருந்து நாட்டை காத்தனர்.

ஒரு வெப்பமான கோடைக்காலத்தின் மாலைப் பொழுதில் ராமநாதபுரத்தின் வீதிகளின் வழியே நிதி அமைச்சர் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் நடையில் ஒருவித அவசரம் தெரிந்தது.

தலைநகரில் வசித்தவர்களுக்கு போர் எங்கோ ஒரு தூர தேசத்தில் நடப்பது போன்ற உணர்வு இருந்தது. போரின் எதிரொலி அந்த நகர வீதிகளில் காணப்படவில்லை. இருப்பினும் போரின் விளைவுகள் மேல் தட்டு அரசியலில் தென்படத் தொடங்கியிருந்தன.

அமைச்சர் கடைத்தெருவில் இருந்த ஒரு சிறிய கடை முன் நின்று, தேன் மற்றும் ம ல்லிகைப் பூ வாங்கினார். போரினால் நான்கு மடங்கு விலை அதிகரித்துஇருந்ததை அவர்  பொருட்படுத்தாமல் கூடுதலாக ஒரு நாணயத்தை அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு,  மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

அவர் சென்றவுடன், அந்த மூதாட்டி ஒரு பழைய கோணிப் பையால் தன் கடையை மூடி விட்டு, கடைத் தெருவின் எதிர் திசையில் நடந்தாள். அவளின் ஒரே மகன் போர்க் காயங்களால் கை கால் செயலற்று, குருடாகி வீட்டில் இருந்தான். அவள் பதினேழு வயது பேரனோ போர் முனையில் அவன் தந்தையின் இடத்தில் இருந்து, ராமநாதபுரத்தின் வீரப் புகழைநிலை நாட்ட போராடிக்கொண்டிருந்தான்.

வேகமாக கடைத்தெருவை கடந்த அமைச்சர், ஒரு குறுக்குச் சந்தில் திரும்பினார். சாதாரண நாளில் ராமநாதபுரத்தின் நிதி அமைச்சர் வீதிகளில் தனியாக நடந்து செல்வது அதிசயக்காட்சியாக இருந்திருக்கும். ஏனெனில் அவரது மெய்க்காப்பாளர்கள் அவரை ஒரு அடி கூட தனியாக விடுவதில்லை. யுத்தமானது இயல்பு வாழ்கையை விழுங்கி நாடெங்கும் ஒரு குழப்பமான நிலையை நிலவச் செய்திருந்தது. அவரது மெய்க்காப்பாளர்களை சில தெருக்கள் தள்ளி இருக்கும் கள்ளுக் கடையில் சில மணி நேரம் காத்திருக்க ஆணையிட்டிருந்தார். அவர்களும் அவரது ஆணைக்கு அடிப்பணிந்து  அந்தக் கள்ளுக் கடையில் காத்துக்கொண்டிருந்தனர். அமைச்சர் ஒடுக்கமான பாதையில் திரும்பி நடந்தார். அந்தப் பாதை சற்று இருட்டாக  இருக்கவே குழிகளிளும் சாணத்திலும் சிக்காமல் கவனமாக நடந்து அந்தப்  பாதையின் முடிவில் இருந்த ஒரு வீட்டின் வாசலை அடைந்தார். வீட்டின் மரக் கதவை குறிப்பிட்ட சில இடைவெளியுடன் மூன்று  முறைத் தட்டி, அந்தக்  கதவு திறக்க காத்திருந்தார்…


***
முப்பது நாட்களாக யுத்த களத்தில் சண்டை புரிந்த அந்த வாலிபன் தனது வலது கை பெறு விரலை இழந்திருந்தான். மேலும் அவன் கால் விரல்கள் குதிரைக்குளம்பில் நசுக்கப்பட்டு காயமடைந்திருந்தன. எதிரியின் வாள்வீச்சில் தனது ஒரு காதை இழக்காமல் மயிர் இழையில் தப்பியிருந்தான். இருப்பினும், துணியால் தன் காயங்களைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரர்களை பந்தாடிக்கொண்டிருந்தான்.  தன் உடலில் இருந்து வியர்வை,  ரத்தம் என எது வடிந்த பொழுதும் அவன் சண்டையை நிறுத்துவதாய் இல்லை. எதையும் பொருட்படுத்தாமல் போர் புரிந்த அந்த வாலிபன் யுத்தகளத்தில் ராமநாதபுரத்தின் மாவீரனாகவே காட்சியளித்தான். தன் தந்தையிடம் இருந்து, போர்க்கதைகள், அவரின் வீர சாகசங்கள், நாடு மற்றும் அரசன் மீது ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய பற்று போன்றவற்றை கேட்டு வளர்ந்த அவனுக்கு சிறு வயதில் இருந்தே போர் மீது ஒரு காதல் இருந்தது. பல நூறு வீரர்களுடன், உடைந்த காலுடன் இருட்டில் தடுமாறி, கொசுக்கள் நிறைந்த  சதுப்பு நிலத்தில் மலம் கழிக்கும் பொழுது, எந்தக் கதையும் ஒரு வெற்றிக்குபின் இருந்த, முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான வீரர்களின்  வலிகளைப் பற்றி சொல்வதில்லை என்று தன்னுள் எண்ணி வருந்தினான்.

அவன் தேச பக்தியே அவன் காயத்திற்கு மருந்து…

***


‘நீங்க இதை வாங்கி இருக்கக் கூடாது’ என்றது வளையல்களின் பின்னணி இசையுடன் ஒரு ரம்மியமான பெண்குரல்.

‘என்னிடம் இல்லாத செல்வமா?’ என்று கூறிக்கொண்டே அமைச்சர் தேனையும் மல்லிகையையும்  அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

‘இன்றைக்கு என்ன விலை?’ என்று அவள்  தினமும் கேட்பதுபோலவே இன்றும் கேட்க, அமைச்சர் காதில் விழுந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை.

‘நிதி அமைச்சர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?’ என்று கேட்டாள் சிரித்தபடியே.

‘அமைச்சரா?… மஹும்… இன்னும் சில நாட்களில் ராமநாதபுரத்தின் அரசன் நான்’ என்று பெருமையாக சிரித்தார்.

‘இதென்ன புதுக்கதை? என்னிடம் எதையும் நீங்கள் முழுசாக சொல்வதேயில்லை ‘ என்று சலித்துக் கொண்டாள்.

‘என்னுடைய வருங்கால அரசிக்கு கோவமா? இதோ சொல்கிறேன் கேள். அரசன் போருக்கு சென்றவுடன், வடதேசத்துபடையில் இருந்து சில வீரர்களை விலை கொடுத்து வாங்குவேன். அவர்களை போர்க்களத்திற்கு அனுப்பி, அரசனைக் கொன்று, எதிர்க்கும் அரசர்களுக்கு பெருமளவு கப்பம் கட்டி, ராமநாதபுரத்தின் மன்னனாக முடிசூடிக் கொள்ளப்போகிறேன்’, அமைச்சரின் முகத்தில் அந்தக் கணம் ஒரு கொடிய நாகத்தின் சீற்றம் இருந்தது. ‘இதற்கு பலிகடா யார்? மக்கள். வரிகட்டி, தந்தைகளையும் தமயன்களையும் போருக்கு அனுப்பி, எனக்காக சண்டையிடும் மக்கள்’.

‘மக்களுக்கு உண்மை தெரிந்தால்?’ என்று பயத்துடன் கேட்டாள் அவள்.

‘அரசனை எதிர்த்து மக்களால் என்ன செய்ய முடியும்’ என்று சொல்லி  ஏளனமாக சிரித்தான்.

***

அன்று இரவு அந்த வாலிபன் தன் கூடாரத்திற்கு திரும்புகையில், காட்டின் முனையில் குதிரைகள் வரும் சலசலப்பு கேட்டது. ஒரு வீரனின் வீட்டில் வளர்ந்த அந்த வாலிபனால் ராமநாதபுரத்து குதிரைகள் எந்த தூரத்தில் இருந்து  வந்தாலும் சரியாக கணித்து விடுமுடியும். இந்த சத்தம் ராமநாதபுரத்து குதிரைகளுடையது அல்ல என்பது அவனால் நிச்சயம் உணர முடிந்தது. அவை வடதேசத்துப் படைக் குதிரைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று  தீர்மானித்தான். சுதாரித்துக் கொண்டு ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். குதிரைகள் நெருங்கி  வர வர, அந்த சத்தத்தின் எதிர் திசையை நோக்கினான். வீரர்களின்  கூடாரத்திற்கு பின்னே இருந்த ராஜாவின் கூடாரம், பௌர்ணமி  நிலவொளியில்  தனியாக தெரிந்தது. ஆபத்தை உணர்ந்து ‘ராஜாவிற்கு ஆபத்து’ என உரக்க கத்திக் கொண்டு, அரச கூடாரத்தை நோக்கி ஒற்றைக் காலை நொண்டிக்கொண்டு ஓடினான். அதற்குள் கறுப்புக் குதிரையில் வந்த சுமார் நாற்பது வீரர்கள் அரசனின் கூடாரத்தை நெருங்கிவிட்டனர்.

அந்த வடக்கு வீரர்கள் குதிரையில் இருந்து இறங்கி தங்கள் வாள்களையும் வேல்களையும் கையில் உயர்த்திப் பிடித்தனர். அரச கூடாரத்தின் வாயிலில் நின்ற அந்த வாலிபன் மேல் எறியப்பட்ட வேல், அவன் வலது தோளை உறசிச் சென்று கூடாரத்தின் துணியைக் கிழித்தது. வாலிபனின் கூச்சல் சத்தத்தால் விழித்த மற்ற வீரர்கள் ஆயுதங்களுடன் அரச கூடாரத்தை நோக்கி விரைந்தனர்.

வடக்கு வீரர்கள் தன்னை நோக்கி முன்னேற, மற்ற வீரர்கள் அரசனை காக்க கீழே இருந்து ஓடி வர, அரசர் கூடாரத்தை விட்டு வெளியே வருவதையும், அவர் கையில் ஆயுதம் ஏதும் இல்லாததையும் அந்த வாலிபன் கண்டான். 

வடக்கு வீரர்கள் மற்ற வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த வாலிபன் கூடாரத்தின்  வாயிலில் அரசரை பாதுகாக்க விரைந்தான். வடக்கர்கள் எப்பொழுதும் வஞ்சகமாக வெல்பவர்கள் என்பதால் இருட்டில் நாலாப் புறமும் விழிப்புடன் நோக்கியபடியே சிதைந்த கால்விரல்களுடன் சிரமப்பட்டு ஓடினான். நிலவை மேகம் மறைக்க, எங்கும் இருள் சூழ கூடாரத்தின் மற்ற முனையில் இருந்து தாடியுடன் ஒரு வீரன் மெதுவாக அரசரை நெருங்வதை கவனித்தான்…

***


மறுநாள் மாலை அதேக் கடையில் பூக்களை வாங்கிய அமைச்சர், காசு கொடுக்க முயலும் பொழுது, அந்த மூதாட்டி காசு வாங்க மறுத்தாள். ‘போரில் துயரப் படும் நம் வீரர்களுக்கு நான் கொடுக்கும் காணிக்கையாக  இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அமைச்சர் சென்றவுடன்  தன் கடையை மூடத் தொடங்கினாள்.

அமைச்சர் கடைத்தெரு வழியே  அந்தக் குறுக்கு வீதியில் சென்று, ஒடுக்கமான பாதையில் இருக்கும் அந்த வீட்டை அடைந்தார். கதவை மூன்று முறை தட்டினார். அவரை பின்தொடர்ந்து வந்த மூதாட்டி எதிரில் இருந்த ஒரு புதரில் மறைந்ததை அவர் கவனிக்கவில்லை. கதவு திறந்தது.

‘இன்றைக்கு என்ன விலை கொடுத்து வாங்கினீர்?’ என்று கேட்டது அந்த பெண்ணின் குரல், வசீகர சிரிப்புடன்.

‘இன்று இலவசம்’ என்றார் அமைச்சார்.

‘அப்படியா!’ என்று அமைச்சரை நிமிர்ந்து பார்த்தவள், தன் பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அந்த கத்தி மின்னியதைக் கண்டஅமைச்சர், சுதாரித்து பின்வாங்க, கத்தி அவர் மார்பில் பாய்ந்தது. வாசற்கதவு சட்டத்தில் இடறிய அமைச்சர், அடி பட்ட பன்றி போல் தெருவில் விழுந்தார். 

ஒரு நொடிப்பொழுதில் மாரில் செருகியிருந்த கத்தியை உருவி எறிந்துவிட்டு ஓடத் தொடங்கினார். புதரில் இருந்த மூதாட்டி தன் சேலை மறைவில் இருந்த வளரியை எடுத்த வலிமையுடம் வீசினாள். அந்த வளரி தெருவில் ஓடிக்கொண்டிருந்த அமைச்சரின் பின் மண்டையை பிளந்து, பின் சுழன்றுக்கொண்டே சற்றே தள்ளி விழுந்தது. மூதாட்டி அந்த வளரியை எடுத்து, தன் சேலை மடிப்பில்  வைத்துக்கொண்டு, அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தாள்…

***

அந்த வடதேசத்து வீரன் அரசரை நெருங்குவதைக் கண்ட வாலிபன், தன் ஆடையினுள் இருந்த வளரியை கையில் எடுத்துக் கொண்டு, சரியான தருணம் வர தயாராக காத்திருந்தான். அவன் வளரி இரும்பினால் செய்யப்பட்டு, ஒரு முனை பந்துபோல் உருண்டையாகவும் மறு முனை வாள் போல்கூர்மையாகவும் இருந்தது. வடதேசத்து வீரன் தன் வாளை நீட்டக்கொண்டு அரசரை நோக்கி முன்னேற, அந்த வீரவாலிபன் வளரியை வீசினான்.அந்த வளரி காற்றில் சில வினாடிகள் தங்கி, மீண்டும் வலது புறம் திரும்பி அரசரை நோக்கி வந்தது. வளரி தன்னை  நோக்கி வருவதைக் கண்ட அரசர், பதறி கீழே அமர, அந்த வளரி அரசரின் பின்னே நின்ற வடக்கு வீரனின் கழுத்தை துண்டித்தது. அமர்ந்தபடியே அந்த வடதேசத்து கொலைகாரன் முண்டமாக கீழே சரிந்து விழுவதை அதிர்ச்சியுடன் கண்டார் அரசர். மெய்க்காப்பாளர்கள் வந்து அரசரை சூழ, அந்த வாலிபன் தன் வளரியை எடுத்துக்கொண்டு வடக்கு வீரர்களுடன் போரிடச் சென்றான். அரசரின் படைவீரர்கள், சில நிமிடங்களில் அந்த வடக்கு வீரர்களை துவம்சம் செய்துவிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்து அரசியிடம் இருந்து அரசருக்கு
ஒற்றர் தலைவன் ஓர் ஓலை கொண்டு வந்தான்.

‘நிதி அமைச்சரின் சூழ்ச்சி அம்பலமானது. தக்க சமயத்தில் தலைநகரம் காப்பாற்றப்பட்டது. உங்களை வஞ்சகமாக தாக்க சில வடக்கு வீரர்களை ஏவியுள்ளார். கவனாமாக இருங்கள்.’
அரசர் ஓலை கொண்டு வந்த ஒற்றர் மூலம் அமைச்சரின் மரணம் குறித்த தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார். மெல்ல புன்னகைத்தார். 

போருக்கு ஆயத்தமான அரசர் தனது மெய்க்காப்பாளராக உங்கள் அப்பாவை நியமித்தார்…” என்று சொல்லி முடிக்கும் முன் கதை கூறிக்கொண்டிருந்த தான் தாய் மடியிலிருந்து, ‘வளரி…வளரி’ என்று கத்திக்கொண்டே கீழே குதித்தான் அந்த சிறுவன்.

‘அது என்னுடைய வளரி. திருப்பிகொடுடா’ என்று அவன் அண்ணன் அவனை துரத்தினான்.

‘பெரிய மருது, அவன் உன் தம்பிதானே சற்று நேரம் விளையாடட்டும் விடு. நீ இங்கு வந்து சாப்பிடு. நீ உண்ணாவிட்டால் அம்மா உனக்கு வளரி வீச சொல்லித் தர மாட்டேன்’ என்று கையில் சோற்றுக் கிண்ணதுடன் தன் மகன்களை பார்த்து சத்தமிட்டாள் அந்த வீரமான தமிழ் தாய்.

Advertisement