குற்றப்பரம்பரை – நாவல் விமர்சனம்


வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை பல பரிமாணங்களில் ஆய்ந்திட முடியும் –  ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறைகளை விமர்சிக்கும் ஒரு சரித்திரம் தழுவிய நாவலாக, ஒரு சாதியின் வரலாற்று பதிவாக, சாதிச்சண்டைகளை சுயலாபத்திற்காக மூட்டிவிடும் சில கொடிய மக்களின் விமர்சனமாக, வைரங்களைத் தேடி அலையும் ஒரு மந்திரவாதியின் கதையாக, பிறப்பிற்கும் வளர்ப்பிக்கும் இடையே ஊஞ்சலாடும் தவிப்பின் பதிவாக – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பம்சம், வீழ்ச்சி இரண்டும் ஒன்றே – ஒரே நாவல் பல விஷயங்களை தன்னில் அடக்க முயற்சித்தது.

இந்த விமர்சனம் ஒரு பரிமாணம் பற்றியது மட்டுமே. கதை சொல்லும் நாவலாக எப்படி இருக்கிறது குற்றப்பரம்பரை?

1920 களில் நடக்கும் இந்த கதையில், கள்ளர் இனத்தின் பழக்க வழக்கங்களையும், அவர்கள் படும் இன்னல்களையும் வேயன்னா மற்றும் அவரின் கொம்பூதி கூட்டத்தின் மூலம் மிக அருமையாக பதிவு செய்கிறார் வேல ராமமூர்த்தி.

வேயன்னா, சேது, வையத்துரை போன்ற கதாபாத்திரங்களின் படைப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. கதை நெடுகே கள்ளரின் வாழ்வியலை மிக உன்னிப்பாக பிரதிபலிக்கும் வண்ணமும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

சில சிறப்பம்சங்கள் இருந்தும், முழு நாவலாக பார்த்தால் குற்றப்பரம்பரை சற்றே ஏமாற்றத்தை தருகிறது. திரைப்படமாகும் செய்திகள் மூலம் இந்த நாவல் பிரபலமடைந்தது இதற்கு பெரிய காரணம்.

வஜ்ராயினி எனும் பாத்திரத்தின் கிளைக்கதை மூலக்கதையுடன் கொஞ்சமும் பொருந்வில்லை. ஒரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள் முடியும் முன்னரே வேறெங்கோ பயணிக்கும் கதைப்போக்கு நடையை இடையிடையே தாமதிக்கச் செய்கிறது. 

வேறு இடத்தில் வளர்ந்து திரும்பும் வேயன்னாவின் மகன் சேது தன் பணிக்கும் பாசத்திற்கும் இடையே படும் மன உளைச்சலை ஓர் உவமையாக இன்னும் விரிவாக மெருகேற்றி இருக்கலாம்.

கதை நெடுக போடப்பட்ட பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் சற்றே அவசர கதியாக முடிகிறது இந்த நாவல்.

குற்றப்பரம்பரை நாவல் பிரபலமான அளவிற்கு அதன் கதை ஈடு குடுக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Advertisement