கவா கம்ஸ் எழுதிய ப்ராஜக்ட் ‘ஃ’ நாவலை நான் படிக்கத் தொடங்கியது முற்றிலும் தற்செயலே. தமிழில் எழுதப்பட்ட அறிவியல் சிறுகதைகளை தேடி புத்தகக்கடைக்கு சென்றிருந்த போது தலைப்பை பார்த்து இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். ஆச்சர்யமூட்டும் கதைச்சுருக்கம், “விரைவில் வெள்ளித்திரையில்”, எழுத்தாளரின் விசித்திரமான புனைப்பெயர் என்று பல விஷயங்கள் கவர்ந்தன. உடனே வாங்கினேன். படித்தும் முடித்தேன்.
நாவலின் ஹீரோ அகில் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அகிலின் தாத்தா அவனுக்கு விட்டுச்சென்ற தடயங்களும், மர்மமான செய்தியுடைய ஒரு கடிதம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. ஃபோனில் அவ்வபோது வரும் மர்ம நபர்களின் மிரட்டல்கள், ‘ழகரம்’ என்னும் ரகசிய அமைப்பின் ஆட்கள் என அகிலின் தேடல் சுவாரஸ்யமாகவே செல்கிறது.
புதையலை தேடி அகில் அண்ட் கோ செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் ஓவியங்கள் போன்ற விஷயங்களை கவா கம்ஸ் கூர்ந்து ஆராய்ந்து எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. மகாபாரதம், குர்ஆன், பைபிள் வாசகங்களில் ஒழிந்துள்ள தடயங்கள் எல்லாம் தெளிவாகும் இடங்கள் மிக அருமை. தேடிச்செல்லும் புதையல் கூட மிகவும் அருமையான கற்பனை.
இடையிடையே அகிலின் நண்பர்கள் “காமெடி” செய்ய முயல்வதும், சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான தடையங்களும் நம் கவனத்தை உடைக்கின்றன.
சிறு குறைகளை தவிர்த்தால் இந்த ப்ராஜக்ட் ‘ஃ’ தமிழில் எழுதப்பட்ட Dan Brown நாவல் என்றே சொல்லலாம்.
ப்ராஜக்ட் ‘ஃ’ இப்போது “ழகரம்” என்ற திரைப்படமாக வெளியாகியுள்ளது. வெறும் 10 லட்சம் பொருட்செலவில் படமாக்கியுள்ளார்கள். கண்டிப்பாக தோல் தட்டி பாராட்டுகள் சொல்லலாம்.