மனோஜ் குரூர் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், தமிழில் கே. வி. ஜெயஸ்ரீ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
சங்கத் தமிழ் இலக்கியம் பற்றியும் ஐந்திணை நிலபரப்புகள் பற்றியும் ஆன்லைன் தமிழ் பல்கலைகழகம் வலைதளத்தில் படித்து கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த நாவல் பற்றி தெரியவந்தது.
எங்கு தேடியும் கிடைக்காமல் போக, கடைசியாக நாவலை வெளியிட்ட வம்சி புக்ஸ் அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தேன். மிகத் துரிதமாக கூரியர் மூலம் அனுப்பி வைத்தார்கள்.
நாவலின் கதைக்களம் பதினேழு நூற்றாண்டுகள் முன்பான தமிழகம். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பெரும் ஆட்சி புரிகின்றனர். நன்னன், பாரி, அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் தங்கள் புகழ் பாடுவோற்க்கு பொன்னும் பொருளும் வழங்கும் வள்ளல்களாக பெருமை கொண்டுள்ளனர்.
இதை அறிந்த பாணரும் கூத்தரும் மன்னர்களை பார்த்து தங்கள் வறுமையைப் போக்க குடும்பங்களுடன் புறப்படுகிறார்.
பல வருடங்கள் முன்பு ஓடிப்போன தன் மகன் மயிலனை எங்கோ சந்திக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் கொழும்பனும் அவனின் மற்ற பிள்ளைகளும் செல்கின்றனர்.
மூன்று பாகங்களாக விரியும் கதை, கொழும்பன், மகள் சித்திரை, மகன் மயிலன் என்று மூன்று கண்ணோட்டங்களில் சொல்லபடுகிறது.
மலைகளில் இருந்து நகரும் கூட்டம் வெவ்வேறு நிலப் பரப்புகளை கடக்கும்பொழுது அந்தந்த நிலத்தின் பூக்களும், வாசனைகளும், மரங்களும், மக்களும், சங்க இலக்கிய பாடல்களில் சொல்லப்பட்டது போல மிக அழகாக காட்சிப் படுத்துகிறார் மனோஜ்.
வேடர், உழவர், பரதவர் என பலதரப்பட்ட மக்களையும் அவர்களின் விருந்தோம்பல், உணவுகள், குடில்கள் மட்டுமின்றி அவர்கள் வழிபடும் கோவில்களும் இறைவிகளும் கூட கண்முன்னே வருகின்றன. ஏறுதழுவல், கூத்தாடல் போன்ற வழக்கங்கள் எல்லாம் துல்லியமாக காட்சிப் படுத்தியது ஆச்சர்யமாக உள்ளது.
மன்னர்கள் மட்டுமின்றி ஔவை கபிலன் போன்ற பெரும்புழவர்களும் கதையில் பெரும்பங்கு வகிக்கும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.
அதிரடியாக படைகள் போர் செய்யும் சரித்திர நாவல்கள் மட்டுமே படித்துப் பழகிய என் போன்றவர்களுக்கு இந்த கதை சற்றே பொறுமையிலக்க செய்யும் என்பது உண்மையே. ஆனால், மன்னர்கள் மத்தியில் இன்றி மக்களின் மத்தியில், ஆடிப்பாடி, உண்டு, இளைப்பாறி நாமே சங்க தமிழ்நாட்டில் பயணம் செய்த களிப்பை வேறெந்த நாவெளிலும் நான் இதுவரை கண்டதில்லை.
நாவலின் தலைப்பு போலவே கதையும், கடந்து செல்லும் நிலங்களும் கவிதையே.
தமிழ் நிலம் அன்றும் இன்றும் என்றும் கவிதையே!