நாலு இட்லி. ஒரு கலக்கி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

 

“சார், நான் எப்போவுமே அப்படிதான் சார். சின்ன வயசுல இருந்தே ஒரு வீட்ட பார்த்தா, முன்வாசல் கதவ தொறக்காம எப்படி உள்ள போறதுன்னு கரெக்ட்டா சொல்லிடுவேன். சில நேரங்கள்ல வண்டி ஒட்டுரோம்னு ஒரு நெனைப்பே இல்லாம வண்டி ஓட்டுவோமே அந்த மாதிரி சார்…” என்று தலையை சொறிந்தான் அந்த இளைஞன்.

அழகாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கனகசபேசனின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு அவள் பிறந்த வீட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் ஆயிற்று. இரவில் வீட்டில் தனியே இருப்பதற்கு நைட் டூட்டியே மேல் என்று ஸ்டேஷனில் நைட் டூட்டி கேட்டு வாங்கிக்கொண்டவர், தினமும் இரவு டூட்டிக்கு போகும் முன்பு ஸ்டேஷன் அருகே இருக்கும் ஹோட்டலில் தனியாக உட்கார்ந்து ஒரு கலக்கி நாலு இட்லி சாப்பிடுவது வழக்கம். ஏழரை நாட்டு சனி இவரை டூட்டியிலும் நிம்மதியாக விடவில்லை – கடந்த இரண்டு மாதங்களாக வரிசையாக வழிப்பறி, திருட்டு என்று அழகாபுரம் எங்கும் ஒரே பிரெச்சனைகள். அனைத்தும் ஒரே கும்பலின் கைவரிசை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.இவ்வளவு தலைவலிகளுக்கு நடுவே இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இன்று ஊர் பேர் தெரியாத இவன் திடீரென கண்முன் தோன்றி இன்ஃபார்மர் வேலை கேட்டு ஏதோ கதை சொல்கிறான் என்று சற்றே கோபமடைந்தார்.

“யோவ், உனக்கு வேலை வேணும்னா வேற எங்கயாவது போடா. ஏன் என் தாலிய அறுக்குற,” என்று சீறினார்.

“சார், நீங்க அந்த திருட்டு கும்பல புடிக்க ஒரு வெறியோட இருக்கீங்கனு ஏரியால எல்லாருக்கும் தெரியும். நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன் சார்…” என்று இழுத்தான்.

“ஓஹோ. சமூகஆர்வலரா? மூடிக்கிட்டு உன் வேலைய பாருய்யா,” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மீசையில் வழிந்த முட்டையை துடைத்தபடியே.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். எனக்கு எவன் சார் வேலை தர்றான். எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான். அதை சொன்னா திருடன்னு பயந்து அடிச்சு தொரத்துறாங்க.”“அதனால நேரா போலீஸ்கிட்ட வந்துட்ட! தைரியம்தான்யா.”

“ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க சார். இந்த கும்பல் எப்டி செயல்படுதுன்னு புட்டு புட்டு வெச்சுர்றேன். இதை ஒரு ஹாபியா பண்றேன் சார். திருட்டு பத்தின செய்தியெல்லாம் ஒன்னு விடாம சேகரிச்சு வெச்சுருக்கேன் சார்.”

இன்ஸ்பெக்டர் அவனை மெல்லிய சிரிப்போடு நோக்கினார். அவனது சுத்தமான சட்டையையும், படிய வாரிய தலைமுடியையும் பார்த்தார். “அவன்மேல் எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வரவேண்டுமென மெனக்கெடுகிறான்” என்று சப்-இன்ஸ்பெக்டரருக்கு தோன்றியது. மெல்ல தலை சாய்த்து அவன் ஹவாய் செருப்பையும் சீராக திருத்தப்பட்ட கால்நகங்களையும் கவனித்தார். “கையில் காசு இல்லையென்றாலும் தன்னை சுத்தமாக வைத்துகொள்கிறான். சின்ன விஷயத்தையும் நன்கு கவனிப்பான்” என்று அவருக்கு புரிந்தது.

“சரி. என்கூட வா. ரவுண்ட்ஸ் போறேன். நீ சொல்றது உண்மையானு பாப்போம்.”

முதலில் நேராக ஒரு அமைதியான தெருவுக்குள் ஜீப்பை செலுத்தினார். “இந்த வீடு ஒரு வாரமா பூட்டியிருக்கு. வீட்டுகாரங்க வர ஒரு நாலு நாள் ஆகும். போய் உன் தெறமைய காட்டு” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.

முதல் வீடு சுலபமாக அமைந்ததென்ற சந்தோஷத்துடன் அவன் விறுவிறுவென நடந்தான். இந்த தெரு முழுவதும் காம்பவுண்ட் வைத்த தனித்தனி வீடுகள் மட்டுமே இருந்தன. திறந்திருந்த பக்கத்துக்கு வீட்டு கேட்டினுள் நுழைந்து இரண்டு வீடுகளுக்கிடையே இருக்கும் காம்பவுண்டில் ஏறினான். பின்பு சன்-ஷேடு மீது எகிறி மொட்டைமாடிமேல் குதித்தான். அங்கிருந்து, “சார், இங்க ஒரே ஒரு சின்ன பாட்-லாக் பூட்டு. ஒடச்சா நேரா உள்ள பூந்துர்லாம்” என்றான். சப்-இன்ஸ்பெக்டர் அவனிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தவர் போல், சற்றும் உணர்ச்சியின்றி, “கீழ வா” என்றார்.

அடுத்து அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கூட்டிச்சென்றார். மஃப்டியில் இருந்ததால், திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேனிடம் தனது அடையாள அட்டையை நீட்டிவிட்டு அவனை உள்ள அழைத்து சென்றார். வாட்ச்மேன் தலையை சொறிந்துகொண்டே ஒரு குழப்பத்துடன் இருவருக்கும் சல்யூட் அடித்தான்.அவன் ஓரிறு நொடிகள் நிதானித்து, பின்னர் கட்டிடத்துக்கு அருகில் இருந்த மரத்தில் சட்டென ஏறி, இரண்டாம் மாடியில் இருந்த ஒரு குளிர்சாதன கம்ப்ரசர் மீது கால் வைத்து, மூன்றாம் மாடி வீட்டின் பால்கனி இரும்புக்கதவை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரண்டு நிமிடங்கள் கழித்து லிப்ட் கதவை திறந்துக்கொண்டு கீழ்தழத்தில் நின்றுகொண்திருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் வைத்தான். “மூணாவது மாடி பால்கனி மட்டும்தான் சார் தொரந்திருந்துச்சு” என்றான் சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த இலையை தட்டிவிட்டப்படியே.

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு யோசனையுடன் ஜீப்பை வேறொரு ஏரியாவுக்கு செலுத்தினார். பின் சீட்டில் அமர்ந்தபடி அந்த தெரு முழுவதும் வரிசையாக உயரமான மதில்செவுருகள் கொண்ட பங்களா வீடுகள் மட்டுமே இருப்பதை அவன் கவனித்தான். ஒரு மாளிகை போன்ற பங்களாவின் முன் ஜீப்பை நிறுத்தினார் சப்-இன்ஸ்பெக்டர்.“கொஞ்சம் கஷ்டம்தான் சார்” என்று அவன் தலையை சொரிந்தபடியே கேட்டை நோக்கி நடந்தான். சப்-இன்ப்செக்டர் அவனையே கூர்ந்து கவனித்தார். அவன் மெல்ல அந்த வீட்டின் காம்பவுண்டை சுற்றி வந்தான். சுவரின் மேற்பாகத்தில் தொங்கிக்கொன்டிருந்த ஒரு கயிற்றை கவனித்தான். “சார், என்ன தூக்கிப்புடிக்க ஒரு ஆளு இருந்த ஈசியா அந்த கயிற புடிச்சு உள்ள போய்டுவேன்.” சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாக அவரது கால்சட்டை பையில் கைவிட்டபடி நின்றார். அவர் உதட்டில் ஏளனமான சிரிப்பு நடமாடியது. அவன் மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வேலைகாரர்கள், காஸ் சிலிண்டர் போட வருபவர்கள் என வெளி ஆட்கள் வந்து செல்ல இந்த மாதிரி வீடுகளில் பின்புறத்தில் ஒரு சின்ன கேட் இருக்குமென்று அவனுக்கு தோன்றியது. தேடிப்பார்த்தான். இல்லை. அவன் உள்ளங்கையில் வேர்க்க துவங்கியது. கால்கள் நடுங்கின. மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வழியேதும் கிடைக்காததால் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று “ஒரே வழி. தூங்குற வாட்ச்மேன் கழுத்த உடச்சுட்டு அழகா மெயின் கேட் வழியாவே உள்ள போறதுதான் சார்.”

“என்ன நக்கலா? நீ சொன்னது என்ன? எந்த வீடா இருந்தாலும் வீட்டு வாசல தொடாம உள்ள போய்டுவேன்னு. மூணுல ஒரு வீடு உன்னால நுழைய முடியல. உன்ன விட திறமையான ஆளுங்க டிபார்ட்மெண்ட்லயே இருக்காங்க. நான் இருக்க நெலமைல அந்த திருட்டு கும்பல புடிக்க எந்த வழி கெடச்சாலும் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். நீ என்னடானா வாட்ச்மேன் கழுத்த ஒடக்கனும்கிற. அடிச்சு உன்னையும் அந்த கும்பலோட உள்ள தூக்கி வைக்கணும் போல இருக்கே.” சப்-இன்ஸ்பெக்டர் விரக்தியில் சீறினார்.

“சார், எனக்கு இத விட்டா வேற எதுவும் தெரியாது சார். இந்த தெறமைய வெச்சு ஒன்னு திருடன் ஆகணும் இல்ல உங்கள மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யனும். உங்கள தேடி வந்தா நீங்களே என்னை உள்ள வெப்பேன்னு சொன்னா நான் என்ன சார் பண்ணட்டும்.”

“உன்ன நம்பி எனக்கு இவ்ளோ நேரம் டயம் வேஸ்ட். அடி வாங்கிக்காம அமைதியா போயிரு.”அவன் பாவமாக அழாத குறையாக கெஞ்சினான்,

“சார். இன்னும் ஒரே ஒரு வீடு. கடைசியா. கேக்குறேன்னு தப்பா நெனைக்க வேணாம். நீங்க அந்த கும்பல புடிப்பென்னு டிவி, பேப்பர்ல எல்லாம் பேட்டி கொடுத்தீங்க. உங்க வீட்டையே அவங்க ஆட்டைய போட்டுட்டா? நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. எப்டி உள்ள ஏறுவாங்கனு கரெக்ட்டா சொல்லிடறேன். உங்க வீட்ட சேப்ப்டி பண்ணிறலாம்.”

“…தா. என்ன கொழுப்பா? எல்லாம் எங்களுக்கு தெரியும், நீ பொத்திக்கிட்டு வண்டில ஏறு. பஸ் ஸ்டாப்ல இறக்கி விடறேன் அடி வாங்காம வீடு போய் சேரு.” அவன் ஏறுவதற்குள் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தார்.

ஜீப்பின் பின் சீட்டில் ஏறிக்கொண்டு அவன் மீண்டும் கெஞ்சினான், “சார். தயவுசெஞ்சு இன்பார்மரா சேர்த்துக்கோங்க சார்.”

சப்-இன்ஸ்பெக்டர் பதிலேதும் சொல்லாமல் இருக்கவே அவன் மெல்ல தொடங்கினான், “எல்லா கும்பலுக்கும் நாலு டைப் ஆளுங்க தேவை சார். கும்பல்ல எத்தன பேரு வேணா இருக்கலாம். ஆனா நாலு பேரு முக்கியம்.” சப்-இன்ஸ்பெக்டர் ஜீப்பின் வேகத்தை குறைத்தார். சாலையில் இருந்து கவனத்தை விளக்காமல் அவன் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.

“திருட்டு கும்பல்களுக்குனே ஒரு பாஷை இருக்கு- சாவி, கட்ட, பல்லினு சொல்லுவாங்க. சாவி எந்த வித பூட்டா இருந்தாலும் ஓடைச்சுருவான். பூட்டு ஓடைக்குறவன் உங்களுக்கே தெரியும் எவ்ளோ முக்கியம்னு. கட்ட ஒரு தடியன்…மத்தவங்கள தூக்கி விடவோ இல்ல பிரெச்சனனு வந்தா சமாளிக்க ரொம்ப முக்கியம்…பல்லி எவ்வளவு உயராமான இடம்னாலும் ஏறிருவான்… இப்போ இருக்க அபார்ட்மென்ட் எல்லாம் கும்பல்ல ஒரு பல்லி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது சார்.” ஜீப்பின் வேகம் இன்னும் குறைந்தது. “இப்போ, நீங்க காமிச்ச முதல் வீட்ட பூட்ட ஒடச்சு கொள்ளையடிக்க ஒரு “சாவி” வேணும். ரெண்டாவதா போன அபார்ட்மென்ட்க்கு ஏறுற “பல்லி” வேணும். அந்த பங்களா பார்த்தோம் இல்ல சார், அதுல “கட்ட” ஒருத்தன் இல்லாம உள்ள போக முடியாது” என்று அவன் சொல்லி முடித்தான்.“எல்லாம் சரி. நாலு பேருனு சொன்ன. அந்த நாலாவது ஆள் யாரு?” என்று கேட்டபடியே ஒரு இருட்டான தெருவுக்குள் ஜீப்பை திருப்பினர் சப்-இன்ஸ்பெக்டர். “அவன்தான் சார் ரொம்ப முக்கியாமான ஆளு. சீட்டு கட்டு ஜோக்கர் மாதிரி. எல்லா கும்பல்லையும் அவன்தான் மூல. எந்த வீடு காலியா இருக்குனு பாக்குறதுக்கு, பதுக்கி வெச்ச அயிட்டங்கள அடுத்த நாள் சாதாரண ஆளு மாதிரி போய் எடுக்கறதுக்குனு எல்லாத்துக்குமே அவன்தான் முக்கியம். எந்த வேலையும் செய்ய தெரியலனாலும் பேசியே எல்லாம் தெரியும்னு நம்ப வெச்சுருவான். திருடங்களுக்குள்ள அதுக்கு பேரு பட்டாணி போடறதுன்னு சொல்லுவாங்க.”

“அடேயப்பா. இவ்ளோ தெரிஞ்சு வெச்சுருக்க” என சப்-இன்ஸ்பெக்டர் சொல்லும்போதே அந்த இருண்ட தெருவில் மூன்று பேர் ஜீப்பை நோக்கி ஓடி வருவதை கவனித்தார். விருட்டென பிரேக் அடிக்க கிரீச்சிட்டு நின்றது அந்த ஜீப். பிரேக் அடித்த வேகத்தில் பின் சீட்டில் இருந்தவன் முன் சீட்டின் மீது தூக்கியெறியப்பட, அவன் சட்டென சப்-இன்ஸ்பெக்டரின் கழுத்தை இறுக்கி பிடித்தான். “சொன்னேன் இல்ல சார். இதோ அந்த மூணு பேரு, சாவி, கட்ட, பல்லி…” என்று சிரித்த படியே கழுத்தை இன்னும் நெறுக்கி அழுத்தினான். எதிர்க்க நடந்து வந்த “கட்ட” தடியன், சப்-இன்ஸ்பெக்டர் ஏதோ நுரையால் செய்த சிலைபோல் அலேக்காக இழுத்து ரோட்டில் வீசினான். அவர் கைகளை பின்னே இணைத்து அந்த தடியன் கட்டிக்கொண்டிருக்க, ஜீப்பின் பின் சீட்டிலிருந்து அவன் கீழே இறங்கி மற்ற இரண்டு பேரிடமும் கூறினான், “மூணு வீடுங்க. தப்பிக்க இந்த ஜீப். உங்க மூணு பேருக்கும் இன்னைக்கு நைட் வேலை இருக்கு. நைட்டோட நைட்டா ஊர காலி பண்றோம்.”

திமிறிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் துணியை வைத்து தினித்துக்கொண்டிருந்த தடியனிடம் திரும்பி, “டேய், முக்கியமா சப்-இன்ஸ்பெக்டர் சார் வீட்டு சாவிய மறந்துறாத. அவர் பாண்ட் பாக்கெட்ல இருக்கும்.” என்று சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தபடியே அவர் கண்ணை பார்த்தான். “யோவ் இன்ஸ்பெக்டரு, அந்த  நாலாவது ஆளுக்கு பசங்க வெச்ச பேரு என்ன தெரியுமா? நரி…” என்றான் கிளம்பிய ஜீப்பின் பின்சீட்டில் குதித்தேரியபடியே.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s